அறிமுகம்

http://bapasi.com/wp-content/uploads/2017/01/logo_banner-615x79.jpg

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 41 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ (B.I) பதிப்பகத்தின் திரு. மாத்யூ அவர்களின் முயற்சியால் சில பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அது  24.08.1976-ல் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது.

இந்தக் கூட்டமைப்பு சென்னை புத்தகத் திருவிழாவை முதலில் ஒரு சில உறுப்பினர்களுடன் அண்ணா சாலையிலுள்ள மதுரஸா யஏ – ஆலம் மேல்நிலைப் பள்ளியில் சிறியதாக ஆரம்பித்தது. அதற்கடுத்த 28 ஆண்டுகள் அதே வளாகத்திலுள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்கு இருந்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்திய மொழிகளில், குறிப்பாகத் தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் பங்கேற்பாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அரங்குகளை நிர்மாணிக்கவும், புத்தகக் காட்சியில் பங்கேற்போர் மற்றும் பார்வையாளர்களின் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான இட வசதிகளும் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வளாகத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது.

அதனால், பபாசி புத்தகக்காட்சியை சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு 2007 ஆம் ஆண்டு மாற்றியது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ இரயில் வேலைகள் நடந்ததால் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல், புத்தகக் காட்சி நடக்கும்போது அங்கு வருகின்ற கூடுதல் வாகனங்களின் காரணமாக மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்ற காரணத்தால் 36, 37, 38  ஆவது புத்தகக் காட்சி (2013,2014,2015) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பபாசி நடத்தியது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத பெருமழையின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்க வேண்டிய 39 வது சென்னைப் புத்தகக்காட்சி தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதத்தில் முதன்முறையாக தீவுத்திடலில் நடத்தப்பட்டது. எதிர்வரும் 10.01.2018 முதல் 22.01.2018 வரை நடைபெற உள்ள 41 ஆவது சென்னைப் புத்தகத் திருவிழாவை மீண்டும் செயின்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் 2,00,000 சதுர அடி பரப்பளவில் இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புத்தகக் காட்சிகளை நடத்துவதைத் தவிர இத்துறையின் வளர்ச்சிக்காகப் பபாசி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இன்றைய மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பப் பதிப்புத் தொழிலைக் கட்டமைக்கவும், அதில் நவீனத் தொழில் நுட்பங்களைப் புகுத்தவும், புதியவர்களுக்குப் பயிற்சிகள் அளித்து, அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டி இந்திய அரசின் NBT நிறுவனத்துடன் இணைந்து பதிப்புத் துறை குறித்த பல பட்டறைகளையும், கருத்தரங்குகளையும் அவ்வப்போது நடத்தி வருவதையும் பபாசி தொடர்ந்து செய்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புத்தகத்திற்கு என்று ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. எங்கள் சங்கத்தில் இன்று 450 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் மற்றும் விற்பனை செய்யும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உள்ளனர். இந்தக் கூட்டமைப்பு இதுவரை சென்னையில் 40 ஆண்டுகளும், மதுரையில் 12 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை வருடந்தோறும் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வந்துள்ளது. மேலும் கோவையில் 5 ஆண்டுகளும் திருச்சியில் 2 ஆண்டுகளும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

Technical Partner

http://bapasi.com/wp-content/uploads/2017/01/lokas_logo-large-2.png

Follow us


Copyrights © 2017 – Bapsi, Powered by Lokas