சென்னை புத்தகக் காட்சி 2025
48-ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 27/12/2024 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து 12/01/2025 வரை நடைபெற உள்ளது.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
நிகழ்ச்சிகள்
மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்வதில் பபாசி மிகவும் பெருமை கொள்கிறது.
போட்டிகள்
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.
விருதுகள்
ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு. மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கு வழங்கப்படுகிறது